தமிழகம்

புதுச்சேரி ம.ந. கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு

செய்திப்பிரிவு

தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் தனி அணியாக களமிறங்குகிறது மக்கள் நலக் கூட்டணி. புதுச்சேரியில் இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் உள்ளன. முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் நிறைவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளின் பட்டியலை தனித்தனியாக அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புதுச்சேரியில் மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளோம். விரும்பிய தொகுதிகளின் பட்டியலை தந்துள்ளோம். அனைவரும் தங்களுக்கு பலமுள்ள தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு பிரச்சாரத்தையும் தொடக்கியுள்ளோம். இன்று (மார்ச் 14) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தொகுதி பங்கீடு உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT