அரிய வகை உயிரினமான 'ஸ்ரீலங்கன் பறக்கும் பாம்பு' கோவையில் மீட்கப்பட்டு, தமிழக - கேரள எல்லையோர வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ளது காளம்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். நேற்று முன்தினம் இவரது வீட்டு வளாகத்தில், பாம்பு போன்ற உயிரினம் ஒன்று மரங்களுக்கு இடையே பறப்பது போல தாவிச் சென்றுள்ளது. இதையறிந்த, வெங்கடேஷ் கோவையில் உள்ள வன உயிர் ஆர்வலர் ஏ.ஆர்.அமீனுக்கு தகவல் தெரிவித்தார். நேரில் வந்து பார்த்தபோது, அந்த உயிரினம் பாம்பு என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அது மரங்களுக்கு இடையே தாவிச் செல்லும் ஸ்ரீலங்கன் பிளையிங் ஸ்நேக் எனப்படும் 'பறக்கும் பாம்பு' என்பதும் தெரியவந்தது.
இந்த பாம்பு சுமார் 2 அடி நீளத்தில், மரப்பட்டை நிறத்தில், பச்சை நிறம் கலந்த செதில்களுடன், தலையில் கருப்பு, மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டது. பின்னர், வேலந்தாவளம் அருகே கேரள எல்லையில் உள்ள புதுப்பதி வனப்பகுதியில் அந்த பாம்பு விடப்பட்டது.
வன உயிர் ஆர்வலர் அமீன் கூறும்போது, 'இந்த வகை பாம்புக்கு விஷத்தன்மை குறைவு. மரத்திலிருந்து கீழே இருக்கும் வேறொரு மரத்துக்கு இவை குதித்துச் செல்லும். அப்போது அதன் உடல் பட்டையாக மாறிவிடும். காற்றில் உடலை சுழற்றிச் செல்வதால், பறப்பது போல தெரியும். அடர்ந்த வனப்பகுதிகளில் மிக அரிதாகக் காணப்படுகின்றன' என்றார்.