உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் 17 ஆண்டுக் கால வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 8 பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை 2004-ல் தொடங்கப்பட்டது. மதுரை, திருச்சி உட்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் உயர் நீதிமன்ற கிளையில் விசாரிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பணிக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தசரா, தீபாவளி விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டது. நவம்பர் 8 முதல் உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தலைமையில் 18 நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசாரிப்பர். இவர்களில் 8 பேர் பெண் நீதிபதிகள் ஆவர்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான நீதிபதிகள் குழுவில் பெண் நீதிபதிகளான ஜெ.நிஷாபானு, அனிதா சுமந்த், வி.பவானி சுப்பாராயன், ஆர்.தாரணி, பி.டி.ஆஷா, எஸ்.ஆனந்தி, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியிலுள்ள நீதிபதிகளில் ஒரே நேரத்தில் 8 பெண் நீதிபதிகள் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் ஆர்.காந்தி கூறியதாவது: உயர் நீதிமன்ற கிளையில் பெண் நீதிபதிகள் அதிகளவில் பணிபுரிவது மகிழ்ச்சியளிக்கிறது. இது நீதித்துறையில் பெண்கள் சாதிப்பது கடினம் என்ற பிற்போக்கு மனநிலையை மாற்றக்கூடிய முக்கிய நிகழ்வாகும். பெண்களால் சட்டத்துறையில் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நற்சான்றாக அமைந்துள்ளது.
நீதித்துறையிலும் பெண்கள் சிகரங்களைத் தொட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் சட்டக் கல்வியை நோக்கி பெண்களை ஈர்க்கும். இது நீதித்துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.