கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் தனித்தனியே வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல்வாதிகளின் கவனம் இப்போது சமூக வலைதளங்களின் பக்கம் திரும்பியுள்ளது. பிரதான கட்சிகள் அனைத்தும் சென்னையை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் வாட்ஸ் அப்பில் குழுக்கள் அமைத்து கட்சியின் செயல் திட்டங்கள் குறித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இப்போது வாட்ஸ் அப்பில் குழுக்கள் வைத்துள்ளன. இதன் மூலம் கட்சியில் உள்ள நிகழ்வுகள், அடுத்தகட்ட பணிகள் ஆகியவை பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால், கட்சி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மிக குறைந்த நேரத்தில் அதிகமானோருக்கு தெரிவிக்க முடிகிறது என்று கூறுகின்றனர்.
தங்கள் கட்சியினரை மட்டுமின்றி, இணையதங்களைப் பயன்படுத்தும் நடுநிலையாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரையும் தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
கட்சிக் கொடி, போஸ்டர், சுவர் விளம்பரம் ஆகியவற்றை மறந்து, சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் மூலம் கருத்து பரிமாற்றத்தை மேற்கொள்ள விலையுயர்ந்த செல்பேசியுடன் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் வலம் வரத் தொடங்கியுள்ளனர்.