கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் பிளஸ் 2 மாணவன், மாணவிக்குத் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து குமரியில் அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிச் சீருடையுடன் மாணவர் ஒருவர், மாணவிக்குத் தாலி கட்டுவதும், காகிதங்களைக் கிழித்து தூவி பிற மாணவர்கள் வாழ்த்துக் கூறுவதும் போன்ற வீடியோ கடந்த இரு நாட்களாக வாட்ஸ் அப், பேஸ்புக், மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே உள்ள பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2-ம் தேதி பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், தன்னுடன் பயிலும் மாணவிக்கு வகுப்பறையில் வைத்துத் தாலி கட்டுகிறார். இதை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் தந்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸார் பள்ளியைத் தொடர்புகொண்டு கேட்டபின்பே இப்படி ஒரு சம்பவம் நடந்தது அவர்களுக்குத் தெரிந்தது. இதனால் பள்ளியில் இருந்து தாலி கட்டிய மாணவன், மாணவி, வீடியோ எடுத்த மாணவன் ஆகிய 3 பேரையும் ஒரு வாரம் பள்ளிக்கு வருவதற்குத் தலைமை ஆசிரியர் தடை விதித்தார். அதே நேரம் பள்ளியில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டதால் வேதனை அடைந்த மாணவியின் தந்தை, மகளைக் கண்டித்ததுடன், தாலி கட்டிய மாணவன் அடிக்கடி செல்போனில் அவதூறான குறுந்தகவல்களை அனுப்பியது குறித்தும் பள்ளியில் புகார் அளித்தார்.
இச்சம்பவத்தில் மாணவர்களின் எதிர்காலம் கருதி 3 பேரிடமும் மன்னிப்புக் கடிதத்தை எழுதி வாங்கிய போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். தாலி கட்டிய மாணவனும், அதற்கு உடன்பட்ட மாணவியும், வீடியோ எடுத்த மாணவனும் வெகு நாட்களுக்குப் பின்னர் பள்ளி திறந்த உற்சாகத்தில் விளையாட்டாகச் செய்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுபோன்று இனி நடக்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழிடம் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கூறுகையில், ’’அரசுப் பள்ளியில் நடந்த இந்த சம்பவம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவத்தையும் பள்ளி ஆசிரியர்கள் மறைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இரு நாட்களாக வீடியோ பரவிய பின்னரே கல்வித்துறை மேலதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிளஸ் 2 படிக்கும் மாணவர் விளையாட்டாகத் தாலி கட்டியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி கடும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இவ்விஷயத்தில் பெற்றோரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதுடன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது.
எனவே குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை முதல் கட்டமாக அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த கவுன்சிலிங்கிற்கு பெற்றோர்களையும் வரவழைத்து மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் குறித்த ஒழுக்க நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தப்படும்.
அதைத்தொடர்ந்து தனியார், மெட்ரிக் பள்ளிகளிலும் இம்முறை நடைமுறைப்படுத்தப்படும். இதைப்போல் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் செல்போன் எடுத்துச்செல்லத் தடை விதிப்பதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது செல்பேசிகளைப் பெற்றோர் கொடுக்கவேண்டாம்’’ என்று புகழேந்தி தெரிவித்தார்.