சட்டப்படிப்பில் முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பார் கவுன்சில் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது;
"வழக்கறிஞர் தொழில் புனிதமானது. தற்போது போலி வழக்கறிஞர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆட்டோ, கார் ஓட்டுனர்கள், அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், வட்டி தொழில் செய்பவர்கள், டெய்லர் மற்றும் முழு நேர அரசியல்வாதிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சட்டம் படித்ததாக வருகை சான்றிதழ் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். இதற்கு தனியாக இடைத்தரகர்களும் உள்ளனர்.
தமிழக அரசு சட்டப்படிப்பை முறைப்படுத்த பல்வேறு சட்டக்கல்லூரிகளை தொடங்கியுள்ளது. பிஎல் ஹானர்ஸ் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை கொச்சைப்படுத்தும் விதமாக போலி வழக்கறிஞர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த போலி வழக்கறிஞர்கள் பிரமாண்டமாக சட்ட அலுவலகம் திறந்து மூத்த வழக்கறிஞர்கள் போல் தங்களை அடையாளம் காண்பித்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதனால் வெளி மாநிலங்களில் சட்டப்படிப்பு படித்தவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் முன்பு அவர்களை பற்றிய உண்மை தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகும். வெளி மாநில சட்டக்கல்லூரிகளில் படித்தவர்கள் உண்மையில் கல்லூரியில் சேர்ந்து படித்தார்களா? 80 சதவீத வருகை சான்றிதழ் பெற்றது எப்படி? என காவல்துறை உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு விசாரித்து சான்றிதழ் பெறவும், பதிவுக்கு விண்ணப்பித்தவர் வீடு அருகே குடியிருப்பவர்களிடம் விசாரிக்கவும், விண்ணப்பதாரரின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்யவும், இதில் முறைகேடு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யராயணா, வேல்முருகன் அமர்வு, மனுதாரரின் கோரிக்கைகளுக்கு 4 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.