தமிழகம்

அரசு உயரதிகாரிகள் யாரும் வராத சூழலில் களத்தில் இறங்கிய புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள்

செ. ஞானபிரகாஷ்

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐஏஎஸ் உட்பட அரசு உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாத சூழலில் ஏடிஜிபி உட்பட முக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் முக்கியமான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் களத்தில் இறங்கி ஆய்வினை தொடங்கினர். பேரிடர் மீட்புக்குழுவுடன் ஐஆர்பிஎன் போலீஸாரும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பொழியும் சூழலில் ஐஏஎஸ் உட்பட முக்கிய உயர் அதிகாரிகள் களத்தில் நேரடி ஆய்வையோ எவ்வித பணியையும் மேற்கொள்ளவில்லை. ஆட்சியர் பூர்வாகார்க் இதுவரை மக்கள் பாதுகாப்புக்காக ஒரு செய்திக்குறிப்பைக்கூட வெளியிடவில்லை. மக்களையோ, செய்தியாளர்களையோ சந்திக்கவும் இல்லை. தலைமைச்செயலர் உட்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும் யாரும் களத்துக்கு வரவில்லை. அதே நேரத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிடத்தொடங்கினர்

ஏடிஜிபி ஆனந்தமோகன் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் குருசுகுப்பம், வம்பாகீரப்பாளையம், ரெயின்போ நகர் உட்பட முக்கியமாக தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்த்தனர்.

அதைத்தொடர்ந்து ஏடிஜிபி ஆனந்தமோகன் கூறுகையில், "புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளோம். மீட்பில் பயிற்சி பெற்ற ஐஆர்பிஎன் போலீஸாரும் இப்பணியில் இணைந்து பணியாற்றுவார்கள்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT