மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்வழங்க வேண்டும் என்று தமிழகபாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘பிரதமர் மோடி கிச்சன்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று பார்வையிட்டு திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களுக்காக சேவை செய்வதில் பாஜக முழு வீச்சில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவசிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இந்த மழைக்காலங்களில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அதில் குறை சொல்வதற்கு ஏது மில்லை.
அதே நேரத்தில் நிவாரணம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாக இருக்கிறது, யாரெல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கின்றார்களோ அவர்களுக்கு உடனடிநிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும். சென்னையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், கொளத்தூரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகில் சென்று அண்ணாமலை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.