தமிழகம்

வீண் சந்தேகங்கள் தேவையில்லை தமிழகத்துக்கான 4 ரேடார்களும் இயங்குகின்றன: வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கான ஸ்ரீஹரிகோட்டா, சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை தேசிய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களும் இயங்குகின்றன என்று இந்திய வானிலை ஆய்வுமைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக ரேடார் தொடர்பான படங்கள் வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் கிடைக்கவில்லை. சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடாரும் பழுதாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பால சந்திரன் கூறியதாவது:

சென்னையில் துறைமுகம் மற்றும் பள்ளிக்கரணை இந்திய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 2 இடங்களில் உள்ள ரேடார்கள், காரைக்காலில் ஒரு ரேடார், ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் ரேடார் என 4 ரேடார்கள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள ரேடார், 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், இயந்திர பாகங்கள் தேய்மானம் அடைந்துள்ளது. அதனால்தொடர்ந்து 24 மணி நேரமும் அதைஇயக்க முடியாது. தேவைப்படும்போது இயக்கிக்கொள்ள முடியும். அதை இந்திய வானிலை ஆய்வுமைய அலுவலர்கள் முடிவு செய்வார்கள். பள்ளிக்கரணையில் உள்ள ரேடார் தொடர்ந்து இயங்கும்.

துறைமுக வளாகத்தில் உள்ளரேடாரை சரி செய்வதற்கான பணிகள், இஸ்ரோவுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேடார்கள் தொடர்ந்து இயங்கும்போது சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். அதை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தில், சென்னை குழுவில் மிகச்சிறந்த ரேடார் நிபுணர்கள் உள்ளனர். இக்குழு, முழு அர்ப்பணிப்போடு கடமையை செய்து வருகிறது. ரேடார் கருவியை மட்டுமே வைத்து வானிலை முன்னறிவிப்பு கணிக்கப்படுவதில்லை.

செயற்கைக்கோள் படங்கள், பலூன்களை பறக்க விடுவது உள்ளிட்டவை மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையிலும் கணிக்கப்படுகிறது. இதுவரை ரேடார் செயல்படவில்லை என்று கூறி, வானிலை முன்னறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து வழங்கப்பட்டுதான் வருகிறது. எனவே, ரேடார் இயக்கம் தொடர்பாக வீண் சந்தேகங்கள் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT