ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2-12-2015-ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், ''7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது'' என தெரிவித்திருந்தது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 7 பேர் விடுதலையை கையில் எடுத்த அதிமுக அரசு, தேர்தல் வருகிறது என்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அன்றாடம் ஏதோ ஒரு பிரச்சினைக்காக பிரதமருக்கு கடிதம் எழுதும் முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்சினைக்காக மட்டும் தலைமைச் செயலாளரை கடிதம் எழுத வைத்துள்ளார்.
தமிழக அரசு எதைச் செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என நினைக்காமல், செய்தி கேள்விபட்டதும், தமிழக அரசின் கடிதத்தை ஏற்று 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும் என அன்றிரவே கருத்து தெரிவித்திருந்தேன்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2014 பிப்ரவரியில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நாளுக்குள் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என மத்திய அரசுக்கு கட்டளையிடுவது போல தமிழக அரசு நடந்து கொண்டிருக்க தேவையில்லை.
பரோலில் வெளியே வந்த நளினி, ''முதல்வர் ஜெயலலிதா விரைவில் தங்களை விடுதலை செய்வார்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர்களின் விடுதலை தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என்பது தெளிவாகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாமல் தமிழக அரசு தாமதித்து வருகிறது.
தற்போது 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு எழுதிய கடிதத்தின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், மிகவும் தாமதமாகி விட்ட இந்த கட்டத்திலாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இப்பிரச்சினை குறித்து மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக'' நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? மாநில அரசுக்கு உள்ளதா? நீதிமன்றத்துக்கு உள்ளதா? என இன்னமும் பட்டிமன்றம் நடத்தி பயனில்லை. உடனடியாக 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு அல்லது 161-வது பிரிவின்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.