திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற உறுதிமொழி இடம் பெறும் என மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி கூறினார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி பேசியதாவது:
சோழவந்தான் தொகுதி அதிமுக கோட்டை என்கின்றனர். அதில் பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. இத்தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுகவே போட்டியிட ஏற்பாடு நடைபெறுகிறது. கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம்.
ஒரு மாதத்திற்கு முன்பே முகவர்களை நியமித்து முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தையே முடித் துவிட்டோம்.
திமுக ஆட்சி நடைபெற்ற வரை தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்தினோம். அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகளாக தடைபட்டு போனது. திமுக ஆட்சி அமைந்ததும் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த உறுதி திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.
முல்லை பெரியாறு அணையில் 136 அடி தண்ணீர் வந்ததும் திறந்திருந்திருந்தால் ஒரு மாதத்திற்கு முன்பே விவசாயத்திற்கு தண்ணீர் கிடைத்து விளைச்சல் அமோகமாக இருந்திருக்கும்.
ஆனால் சாதனை என்ற பெயரில் 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே திறக்காமல் தாமதித்ததால் பல ஏக்கர் நெற்பயிர் காய்ந்துவிட்டது. இந்த விவசாயிகள் கோபம் திமுக வாக்கு வங்கியாக மாறும் என்பதால் யாரும் வெற்றியில் சந்தேகப்பட வேண்டாம் என்றார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் கென் னடிகண்ணன், பாலராஜேந்திரன் உட் பட பலர் பங்கேற்றனர்.
சோழவந்தான் தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர். (வலது) கூட்டத்தில் பேசுகிறார் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி.
அதிமுகவை விட அதிக கூட்டம்
நேற்று திமுக கூட்டம் நடைபெற்ற இதே மண்டபத்தில் அதிமுக முகவர் கூட்டம் கடந்தவாரம் நடைபெற்றது. இரு கூட்டங்களுக்கும் திரண்ட கட்சியினர் கூட்டத்தை ஒப்பிட்டு உளவுத் துறையினர் கணக்கெடுத்தனர். இதில், அதிமுகவைவிட திமுகவிற்கு இருமடங்கிற்கும் மேலாகக் கூட்டம் இருந்தாக தெரிவித்துள்ளனர். மேலும் முகவர்கள் 4,300 பேருக்கும் தனித்தனியாக திமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்து போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.