பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பெரியசாமி மலை அடிவாரத்தில் உள்ள செங்கமலையார் கோயிலில் சேதப்படுத்தப்பட்ட சாமி சிலைகள். 
தமிழகம்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் 3-வது முறையாக கோயிலில் சாமி சிலைகள் உடைத்து சேதம்: சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலின் உபகோயிலான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ளன. இவை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த அக்.6 அன்று பெரியசாமி கோயிலில் 10 அடி உயரம் உள்ள பெரியசாமி சிலை உட்பட 9 சிலைகள், செங்கமலையார் கோயிலில் 5 கன்னிமார்கள் சிலைகள் உட்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட 14 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தன.

இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் நடராஜன் என்கிற நாதன்(37) என்பவரை பெரம்பலூர் போலீஸார் அக்.8-ல் கைது செய்தனர்.

அதன் பின்பு, அக்.27 அன்று பெரியசாமி கோயிலில் 15 அடிஉயரம் உள்ள பெரியசாமி சிலை உட்பட 5 சிலைகள், செங்கமலையார் கோயிலில் 15 அடி உயரம் உள்ள செங்கமலையார் சிலை உட்பட 13 சிலைகள் என 18 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள், சோலார் விளக்குகள் அமைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பெரியசாமி கோயிலில் 15 அடி உயரம் உள்ள ஒரு குதிரை சிலை, இதன் அருகே உள்ள ஆத்தடி சித்தர் கோயிலில் 3 அடி உயரம் உள்ள நாக கன்னி சிலை உட்பட 2 சிலைகள், பெருமாள் கோயிலில் 5 அடி உயரம் உள்ள ஒரு ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோயிலில் 15 அடி உயரம் உள்ள பொன்னுசாமி சிலை உட்பட 5 சிலைகள் என மொத்தம் 9 சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியிருந்தது தெரியவந்தது. மேலும், கண்காணிப்புக் கேமராக்கள், சோலார் மின் விளக்குகளையும் உடைத்து சேதப்படுத்திஉள்ளனர். இச்சம்பவத்தை திட்டமிட்டு மர்ம நபர்கள் செய்திருப்பதாக சந்தேகிக்கும் போலீஸார், கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT