ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், ஓடை உள்ளிட்டவைகளை பருவ மழைக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தூர்வாருதல், ஆழப்படுத்துதல் அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது கடலூர் மாவட்டம் பாதிப்புக்குள்ளாவது வாடிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியர் அலுவல கங்களில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஒரு சம்பிரதாய நிகழ்வாக நடந்து வருகிறது என்பதற்கு தற்போதைய வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ளும் பணிகள் ஒரு உதாரணம்.
வழக்கம் போலவே கடலூர் மாவட்டத்தில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கத் தொடங்கியுள்ளது. அவற்றை பொதுப் பணி மற்றும் நகர்புற, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்பொக்லைன் இயந்திரங்களை கொண்டு அகற்றி வருகின்றனர்
விருத்தாசலம்-கடலூர் சாலை மார்க்கத்தில் உள்ள ஊமங்கலம் சாலையோர வாய்க்காலில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் வாய்க் காலில் செடி கொடிகள் படர்ந்து அடர்ந்து காணப் பட்டதால் தண்ணீர் வேகமாக வெளியேற முடியாமல் பாலத்தின் மீதும், வாய்க்கால் ஓர விளை நிலங்களிலும் புகுந்துள்ளது. இதையடுத்து கொட்டும் மழையில் அவசர அவசரமாக பொதுப்பணி நீர்வள ஆதாரத் துறையினர் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலைகளில் மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலைகளில் சிறு சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குண்டும் குழியுமாக உள்ள இந்த இடங்களில் மழை நின்றவுடன் பணிகளைமேற்கொள்வதற்கு பதிலாக மழை பெய்து கொண்டி ருக்கும் நேரத்தில், கான்கிரீட் கலவைகளை கொட்டி நிரப்பிக் கொண்டிருந்தனர். இதுபற்றி அங்கிருந்த நெருஞ்சாலைத்துறை மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, “2 மணிநேரம் அப்பகுதியில் வாகனம் செல் லாத வகையில் தடுப்புக் கட்டை வைத்துள்ளோம். அதற்குள் கான்கிரீட் செட் ஆகிவிடும். அதனால் பிரச்சனை ஏற்படாது” என்றார். ஆனால், ‘மழை வருமே!’ என்றதற்கு, “அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று எதிர் கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்வதற்கு முன் செய்ய வேண்டிய பணிகளையும் மழைக்கு பிறகு செய் யவேண்டிய பணிகளையும் மழை பெய்து வரும் நேரத்திலேயே செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்காது என்பது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் தெரிந்தும் அதையே தொடர்கின்றனர்.