சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி, ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, சீமைக்கருவேல மரங் கள் ஆகியவற்றால் மறைந்து போன விருசுழியாறு 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை, நத்தம் மலைப்பகுதிக ளில் உற்பத்தியாகும் பாலாறும், உப்பாறும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இணைந்து பாலாறு என்ற பெயரில் திருப்பத்தூர் கண்மாயை அடைகிறது. அங்கி ருந்து விருசுழியாறாக மாறி கல்லல், தேவகோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்த ஆறு மூலம் 72 கண்மாய்கள் பயன்பெறும். இதன்மூலம் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாகவும் இருந்தது. வறட்சியான காலங்களில் இந்த ஆற்றில் ஊற்று தோண்டி கிராம மக்கள் குடிநீர் எடுத்துள்ளனர்.
காலப்போக்கில் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, சீமைக்கருவேல மரங்கள் முளைத்ததால் வழித் தடமே தெரியாமல் மறைந்தது. மேலும் தொடர் வறட்சியால் இந்த ஆற்றில் 15 ஆண்டுகளாக தண்ணீர் செல்லவும் இல்லை. இதனால் விருசுழி ஆறு இருப்பதையே அப்பகுதி மக்கள் மறந்தனர்.
இந்நிலையில் தற்போது அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. மேலும் மறைந்து போன விருசுழியாறு மீண்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டு களுக்கு பின் எழுவன்கோட்டை அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை ஏராளமானோர் கண்டு களித்து வருகின்றனர்.