பழநியில் நடந்த கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில், சூரன்களை சின்னக்குமாரர் வதம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் கந்தசஷ்டிவிழா நவம்பர் 4 ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
மலைக்கோயிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து விநாயகர், துவாரபாலகர்கள், நவவீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் தங்கள் கைகளில் காப்பு கட்டிக்கொண்டு சஷ்டிவிரதம் இருக்க தொடங்கினர்.
கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு தினமும் மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை கிரிவீதிகளில் நடைபெற்றது. முன்னதாக மலைக்கோயிலில் மரிக்கொழுந்து அம்மனிடம் சூரனை வதம் செய்ய சின்னக்குமாரர் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து சன்னதி திருக்காப்பிடப்பட்டது(நடை சாத்துதல்). மலைக்கோயிலில் இருந்து வந்து மலையடிவார கிரிவீதிகளில் சின்னக்குமாரர் மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.
வடக்கு கிரிவீதியில் தாரகசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை அடுத்தடுத்து சுவாமி வதம் செய்தார்.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தடைவிதிக்கப்பட்டிருந்ததால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சூரன்களை வதம் செய்த சின்னக்குமார் வெற்றிவிழாவிற்கு பிறகு மலைக்கோயில் சென்றடைந்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் காண ஏதுவாக யூடியூப் மூலம் கோயில் நிர்வாகம் ஒளிபரப்பியது.
கந்தசஷ்டி விழா நிறைவாக நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.