தமிழகம்

வாக்காளர் பட்டியல் முகாம்கள்: கட்சி நிர்வாகிகளுக்கு கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’2022 ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்வதற்கான பணிகள், தலைமைத் தேர்தல் ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டு, மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் 1.11.2021 முதல் 30.11.2021 வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், பெயர்களை நீக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் மனு அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, 13.11.2021 சனிக்கிழமை, 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை, 27.11.2021 சனிக்கிழமை, 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம்பெயர்ந்த வாக்காளர்களும், 1.1.2022 அன்று 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் தங்களது பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்வதற்குமான படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும்.

இதனடிப்படையில், வருகிற ஜனவரி 1ஆம் தேதி 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாகக் குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்கவும், மேலும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மாவட்டத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் 5.1.2022 எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட அட்டவணைகளின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்நாட்களில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம, சர்க்கிள், வார்டு நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தங்களை முழுமையாக இப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் சிறப்பு அக்கறையோடு காங்கிரஸ் கட்சி அமைப்பு நிர்வாகிகளை இப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து, தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்குத் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT