தமிழகம்

மழை வெள்ளத்தால் பாதிப்பு: முதல்வர் 3-வது நாளாகத் தொடர்ந்து ஆய்வு

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், சோழிங்கநல்லூர், பெருங்குடி பகுதிகளில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியது.

தேங்கியுள்ள மழை நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறி, உணவின்றித் தவிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்றும், முதல்வரின் சொந்தத் தொகுதியுமான கொளத்தூர் தொகுதியின் ரமணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அக்பர் ஸ்கொயர், மக்காரம் தோட்டம் என மொத்தம் 23 தொகுதிகளில் கொளத்தூர் முதல்வர் ஆய்வு மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரவாயல், போரூர் ஏரிகளிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதனிடையே, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை குறித்து அந்தந்த மண்டல கண்காணிப்பாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT