சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்த வடசென்னை, துறைமுகம் பகுதிகளை எடப்பாடி கே.பழனிச்சாமி பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாட்களாக நேரில் சென்று ஆய்வுசெய்து பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வரும் அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். நேற்று கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உணவுப் பொருட்களை வழங்கினார்.
இன்று வடசென்னை மாவட்டம், துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, வால்டாக்ஸ் சாலை அம்மன் கோயில் பகுதிகள், யானைக்கவுணி உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் வாரியத் தலைவருமான நா.பாலகங்கா கழக மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் முன்னாள் எம்.பி. உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.