திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த நவ.1 முதல் திரையரங்குகளில் நூறுசதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அனுமதியளித்து கடந்தஅக்.23-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி உடன்குடியைச்சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிபி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளதால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. ரசிகர்கள் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “நிபுணர்களின் ஆலோசனைப்படி அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தலையிட முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், “மீன் சந்தைகள் செயல்படுவது போல திரையரங்குகள் இருக்காது. இந்த விஷயத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக் காலங்களில் கரோனாதாக்கம் அபாய அளவை தாண்டவில்லை” என்று குறிப்பிட்டு, எந்தஆதாரங்களும் இல்லாமல் இதுபோன்ற வழக்குகளைத் தொடரக்கூடாது என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
அத்துடன், கரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், தற்போதைய சூழலை மாநில அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.