தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியகுழுவினர் சென்னை வந்துள்ளனர். இன்று சென்னை அரசு பொதுமருத்துவமனையில் நோயாளிகளை பார்க்கவுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய அரசின் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குழுவினரான மருத்துவர்கள் ரோஷினி ஆர்த்தர், நிர்மல் ஜோ, ஜான்சன் அமலா ஜாஸ்மின் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேற்று சந்தித்தனர். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந் தனர்.
இந்த சந்திப்புக்குப்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்பரவல், சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுகள் குறித்து அறிந்துகொள்ளவும், ஆலோசனை வழங்கவும் மத்திய அரசின் மூன்று பேர்கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே அவர்களிடம் விளக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் டெங்கு போன்ற மழைக்கால நோய்கள் கூடுதலாகும் என்கிற வகையில் சேவைத்துறையின் அலுவலர்களுடன் தமிழக முதல்வர், 2 முறை கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் அறிவுரைவழங்கியிருக்கிறார். மேலும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நோயாளிகளை நாளை (இன்று)இக்குழுவினர் பார்க்க உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்றுடெங்குவுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்று பார்த்த குழுவினர், டெங்குவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ வசதி, மருத்துவக் கட்டமைப்புகள், அபேட் தெளிப்பது, புகை மருந்துபோன்றவை போதுமான அளவில்கையிருப்பில் உள்ளதா என்பனவற்றை ஆய்வு செய்துள்ளனர்.
சென்னையில் இன்று (நேற்று)டெங்குவினால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 493பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 30 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் 1 லட்சத்து 21 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல்வர், 9 மணிநேரம் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மழைவெள்ளச் சேதத்தைபார்வையிட்டு, நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். ஒருமாநில முதல்வர், மாநகராட்சி கட்டிடத்தில் சேவைத்துறைகளுடனான கூட்டம் நடத்தியதும் இதுவே முதல்முறை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.