2018-ல் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அப்போதைய முதல்வர் பழனிசாமி மீது குற்றம்சாட்டி கனிமொழி எம்.பி. பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் தமிழக அரசுசார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், வழக்கை ரத்துசெய்யக் கோரி கனிமொழி தரப்பில்உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
அப்போது கனிமொழி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், தமிழக அரசுத் தரப்பில் மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவும் ஆஜராகி, கடந்த அதிமுகஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளதாக வாதிட்டனர்.
அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி எம்.நிர்மல்குமார், கனிமொழி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். இதேபோல, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன், முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.