கணவருடன் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். 
தமிழகம்

ஏழைப் பெண்களுக்கு நிலம் வழங்கி வாழ்வில் ஒளியேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்: பத்மபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவம்

தாயு.செந்தில்குமார்

ஏழைப் பெண்கள் 13,500 பேருக்குதலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கிஅவர்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி கிராமத்தில் 1926-ல் ராமசாமி-நாகம்மாள் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். 11 வயதில் தந்தை காலமானார். அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், மதுரையின் முதல்பெண் பட்டதாரி என்று போற்றப்பட்டார்.

வினோபா பாவேயின் ‘சர்வோதயா’ அமைப்பில் இணைந்து பூமிதான இயக்கத்திலும் கலந்து கொண்டார். நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 1968-ல் தலித் தொழிலாளர்கள் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இதை அறிந்தகிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நிலைகுலைந்தார். படிப்பறிவு இல்லாத கூலி தொழிலாளர்களுக்கு சேவை ஆற்றுவதே தன் கடமை என முடிவெடுத்து, 1968-ல் தனது கணவர் ஜெகநாதனுடன், நாகை மாவட்டம் கீழ்வேளூருக்கு வந்தார். நிலமற்ற விவசாயிகளான பண்ணைக் கூலிகளுக்கு சொந்தமாக நிலம் பெற்றுதருவதை லட்சியமாக கொண்டார்.

அதன்பேரில் உழவனின் நில உரிமை இயக்கம் (லாப்டி) என்ற அமைப்பை ஏற்படுத்தினார். மேலும் நாகை மாவட்டத்தை குடிசைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் லாப்டி அமைப்பு நிதி மூலமாக 2,500-க்கும் மேற்பட்ட வீடுகளை நிலமற்ற ஏழைகளுக்கு கட்டித் தந்துள்ளார். அத்துடன், நிதி திரட்டி நில உரிமையாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, ஏழை பெண்கள் 13,500 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்துள்ளார்.

மேலும் இளைஞர்கள், பெண்களுக்கு தையல் பயிற்சி, கணினி பயிற்சி, தச்சுத் தொழில், இயற்கை உரம் தயாரித்தல், மிளகாய் பொடிதயாரித்தல் உட்பட பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறார். அத்துடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கும் விடுதிகள் அமைத்தல், ஏழை பெண்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள்வழங்குதல், மதுவிலக்கு பிரச்சாரம்உட்பட ஏராளமான சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தனது சமூகப் பணிகளுக்காக பத்ம ஸ்ரீ, ஜம்லால் பஜாஜ் விருது, பகவான் மகாவீர் விருது, அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஓபஸ் விருது, ஸ்வீடன் நாட்டின் மாற்று நோபல் பரிசான ரைட் லைவ்லிஹுட் விருது என பல்வேறு விருதுகளை பெற்றார். 2020-ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பல விருதுகளை பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

SCROLL FOR NEXT