நீலகிரி மாவட்டம் குந்தா மின் வட்டத்தில், ராட்சத குழாய்களில் சகதி அடைத்துள்ளதால், 415 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயாறு, சிங்காரா, பார்சன்ஸ்வேலி, காட்டுக்குப்பை உட்பட 12 மின் நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாகவே பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேல்பவானி அணையில் 160 அடிக்கும், எமரால்டு அணையில் 120 அடிக்கும், அவலாஞ்சி அணையில் 122 அடிக்கும், கெத்தை அணையில் 150 அடிக்கும், போர்த்திமந்து அணையில் 110 அடிக்கும், பைக்காரா அணையில் 88 அடிக்கும், குந்தா அணையில் 86 அடிக்கும், பார்சன்ஸ்வேலி அணையில் 55 அடிக்கும், சாண்டிநள்ளா அணையில் 35 அடிக்கும், கிளன்மார்கன் அணையில் 25 அடிக்கும், மாயாறு அணையில் 15 அடிக்கும், முக்குருத்தி அணையில் 16 அடிக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதுகுறித்து குந்தா மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு தொடர் மழையால், மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளில் 50 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் இருப்பில் உள்ளது. எனவே கோடை காலத்தில் மின் உற்பத்தியில் சிக்கல் இருக்காது என நம்புகிறோம். 12 மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள 32 யூனிட்களும் தயார் நிலையில் உள்ளன,’’ என்றனர்.
குழாய்களில் சகதி அடைப்பு
குந்தா மின் வட்டத்தில் ராட்சத குழாய்களில் சகதி அடைப்பு ஏற்பட்டு, 415 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எமரால்டு அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் கொண்டு வரும் தண்ணீர், குந்தா அணையில் தேக்கப்பட்டு, மொத்தம் 415 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குந்தா அணையில் மொத்தமுள்ள 89 அடியில் பாதி அளவுக்கு சகதி நிறைந்துள்ளது.பல ஆண்டுகளாக சகதி அகற்றப்படாததால், தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழையால், கெத்தை, பரளி மின் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய்களிலும், சகதி அடைத்துள்ளது. எமரால்டு அணையில் இருந்து குந்தா அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. குந்தா மின்வட்டத்தில், 415 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.