சூளை, அஷ்டபுஜம் சாலை பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த சென்னை காவல்துறையினர் குழந்தையையும், அவரது தந்தையையும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தமிழகம்

மழை வெள்ள மீட்பு பணியில் சென்னை காவல் துறை

செய்திப்பிரிவு

மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் சென்னை காவல் துறை முழு அளவில்ஈடுபட்டுள்ளது. மழைநீரில் தத்தளித்தவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் ஏற்படும் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்புக்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னையில் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் களப்பணியில் உள்ளனர். இந்நிலையில், சூளை, அஷ்டபுஜம் ரோடு, அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். சூளை, அஷ்டபுஜம் ரோடு, பிரதிஷா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹீராலால் என்பவரது 2 வயது குழந்தைஉடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், காவல் உதவி ஆய்வாளர்டேவிட் தலைமையிலான சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு காவல் குழுவினர் குழந்தையும் அவரது தந்தையையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சூளை, அஷ்டபுஜம் சாலைபகுதியில் வசிக்கும் மணி (80) என்ற முதியவர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார். இதை அறிந்த வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் மணியை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல் தி.நகர், ராமன் தெருவில் வசித்து வரும் மூர்த்தி (81) என்ற வயதான நபரின் வீட்டை மழை நீர் சூழ்ந்து வெளியே வராமல் தவித்தார்.

தகவல் அறிந்த மாம்பலம் போலீஸார் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாபரன் தலைமையிலான சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு காவல் குழுவினர் சம்பவ இடம் விரைந்துமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஷியாமளா(70) ஆகியோரை மீட்டு, நாற்காலியில் அமர வைத்து மழைநீர் பாதித்த பகுதியிலிருந்து தூக்கி வந்து, பின்னர் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்தனர்.

எழும்பூர் நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையில் விழுந்த மரம் சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு காவல் குழுவினர் மூலம் வெட்டி மரக்கிளைகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT