சமூக வலைதளப் பதிவுகளையே சிபிஐ விசாரிக்கும்போது, தமிழக சிஆர்பிஎஃப் வீரரைக் கண்டுபிடிப்பது தேசிய முக்கியத்துவம் பெற்றது இல்லையா? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உடனடியாக ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை ஆண்டுக்கு முன்பு தமிழக சிஆர்பிஎஃப் வீரர் அண்ணாதுரை டெல்லியில் மாயமானார். வீடு திரும்பாத தன் கணவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது மனைவி தெய்வகனி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த தெய்வகனி, தனது மனுவில், ''என் கணவர் அண்ணாதுரை, மகாராஷ்டிராவில் சிஆர்பிஎஃப் வீரராகப் பணிபுரிந்தார். அவர் சண்டிகருக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். சண்டிகரில் பணியில் சேர்வதற்கு முன்பு 2019-ல் 20 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
விடுமுறை முடிந்து சண்டிகரில் பணியில் சேர ரயிலில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜூலை 1-ல் போனில் டெல்லி வந்து சேர்ந்ததாகக் கூறினார். அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை. ஜூலை 2-ல் டெல்லி போலீஸ் எஸ்ஐ என்னிடம் போனில், என் கணவரின் உடைமைகள் மட்டும் வந்திருப்பதாகவும், கணவர் எங்கே எனத் தெரியவில்லை என்றும் கூறினார். என் கணவரைக் கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்'' என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில், மனுதாரர் கணவர் மாயமானது தொடர்பாக 2019 முதல் டெல்லி போலீஸார், சிஆர்பிஎஃப் வீரர்கள் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் மனுதாரரின் கணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், ''இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நபிகரீம் போலீஸார், பாளையங்கோட்டை போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை'' என்றார்.
டெல்லி போலீஸாருக்கு உத்தரவு
சிபிஐ தரப்பில், மனுதாரரின் கணவர் காணாமல் போன வழக்கு சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு அல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ''ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை சிபிஐ, என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், சிஆர்பிஎஃப் வீரரைக் கண்டுபிடிப்பது தேசிய முக்கியத்துவம் பெற்றது இல்லை எனக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.
சிஆர்பிஎஃப் வீரர் மாயமான வழக்கு குறித்து டெல்லி நபிகரீம் போலீஸார் மற்றும் பாளையங்கோட்டை போலீஸார் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மனுதாரரின் கணவர் மாயமானது தொடர்பான வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் டெல்லி நபிகரீம் போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கூறி விசாரணையை நவ.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.