மழைநீர் வடிந்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் கனமழை நீடித்தது. இந்த நிலையில் மழை நீர் காரணமாக சென்னையின் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளன.
இந்த நிலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போது, “ தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு ஒவ்வொரு துறைக்கு உத்தரவுகளை வழங்கி இருக்கிறார்.
அதன்படி சென்னையில் இருக்கக் கூடிய 223 துணை நிலை மின் நிலையங்களில் ஒரே ஒரு துணை மின் நிலையத்தில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீரால் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்தப் பிறகு மின்சாரம் சீராக வழங்கப்படும். முன்னேற்பாட்டுக்காகவே மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது” என்றார்