தமிழகம்

கோடநாடு வழக்கு: தனபால், ரமேஷின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ஆர்.டி.சிவசங்கர்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் ரமேஷின் நீதிமன்றக் காவலை 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது. இந்தக் கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வாளையாறு மனோஜ் தவிர மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக உயிரிழந்த கனராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்டக் காவல்துறையினர் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சாட்சியங்களைக் கலைத்ததாகத் தெரியவந்ததை அடுத்து, இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இருவரையும் போலீஸார் 10 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், இருவரின் நீதிமன்றக் காவல் முடிந்ததை அடுத்து இன்று ( நவ.8) உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

இருவரையும் மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் பாதுகாப்புடன் கூடலூர் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT