தமிழகம்

கனமழை பாதிப்பு; முதல்வர் ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்த பிரதமர்: நிதி அளிப்பதாக உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை பாதிப்புகள் குறித்து போனில் கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி பாதிப்புகளைச் சீர்செய்திட போதிய நிதி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உறுதி அளித்தார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

சென்னை நகரில் அதிகபட்சமாக 23 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளதால் பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் தமிழகமெங்கும் பரவலாக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கனமழை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

''தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இன்று தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

அப்போது, முதல்வர் பிரதமரிடம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் தெரிவித்தார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் பற்றியும் முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

பிரதமர் உறுதி

தமிழகத்தின் மாநிலப் பேரிடர் நிதியானது கரோனா நிவாரணப் பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் எனவும் பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்திட தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT