தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம் 2006 சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனத்தில் போட்டியிட்டபோது, அரசியல் எதிரிகள் வீடு புகுந்து அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
அச்சுறுத்தல் இருந்ததால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், அவரது வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் வழங்க காவல் துறை முடிவு செய்தது.
இந்த நிலையில், நடந்து முடிந்த விழுப்புரம் மாவட்டஊரக உள்ளாட்சித் தேர்தலில்திமுகவினரின் அராஜகத்தையும், அவர்களது தேர்தல் தில்லுமுல்லுகளையும் துணிவுடன் எதிர்த்து நின்று அதிமுக வேட்பாளர்களுக்கு முழு பாதுகாவலனாக விளங்கிய சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஏதோ உள்நோக்கத்துடன் இது நிகழ்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.
முருகானந்தம் கொலை வழக்குவிசாரணைக்கு வரும் நிலையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்தான் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதை கடுமையாக கண்டிக்கிறேன். வரும்காலங்களில் அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால் அதற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.