வழக்கறிஞர் சமூகநீதி பேரவை சார்பில் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ல் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மத்திய அரசு ஆட்சி முடியும் நிலையில் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவசர சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் உள்ள சில பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவான பெரும்பாலான வழக்குகள் தோல்வியில் முடிவதற்கு இதுதான் மூலகாரணம். இந்த சட்டதிருத்தத்தின் மூலம் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த சட்டத்திருத்தம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் சட்டமாக அமலுக்கு வந்து விட்டது. எனவே, மனுதாரர் இந்த சட்டத்தை எதிர்த்துதான் வழக்கு தொடர வேண்டுமே தவிர, சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியாது” என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.