தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ள அபாயம் உள்ள முடிச்சூர் அமுதம் நகர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பாளர் சமயமூர்த்தி உள்ளிட்டோர்.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

கனமழையால் 50 ஏரிகள் நிரம்பி அடையாறில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் கலக்கிறது: வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் செங்கை ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

கொட்டித் தீர்த்த கனமழையால் 127 ஏரிகளில் 50 ஏரிகள் நிரம்பி, வெளியேறும் உபரிநீர் அடையாற்றில் கலக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் அடையாற்றில் விநாடிக்கு சுமார் 5,000 கன அடி நீர் கலக்கிறது. வெள்ளம் அபாயம் உள்ள பகுதிகளில் செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் படப்பை, மணிமங்கலம், தாம்பரம், ஆதனூர் உள்ளிட்ட அடையாறு ஆற்றின் சுற்றுப் பகுதிகளில் உள்ள 127 ஏரிகளில் 50 ஏரிகள் நிரம்பியுள்ளன. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் விநாடிக்கு 5,000 கனஅடி உபரிநீர் அனைத்தும், கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் மழைநீர் கால்வாய் வழியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடையாறு ஆறு முறையாக சீரமைக்கப்பட்டதால், தற்போது 80 சதவீதம் குடியிருப்புகளில் மழை வெள்ளம், பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இப்பகுதிகளில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நீர்வள ஆதாரத் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து, ஆட்சியர் ராகுல்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கத்தை விட, 20 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்துள்ளோம். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏரியில் இருந்து, 2,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை, பெரிய வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும், 280 முகாம்கள் அமைக்கப்பட தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற டீசல் மோட்டார் பம்பு செட்டுகள், ஜே.சி.பி. இயந்திரங்கள், கிரேன் ஆகியவை தயாராக உள்ளன.

வரும் 9-ம் தேதி புயல் எச்சரிக்கை அபாயம் உள்ளதால், மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்புகளில் இருந்து மீட்க, 200 படகுகள் தயார் நிலையில் உள்ளன.

மதுராந்தகம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளதால் 6 மதகுகள் வழியாக, உபரிநீர் வெளியேறி வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு, ஒரு முறை ஏரி கண்காணிக்கப்பட்டு, அதன் அறிக்கை எனக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மாவட்டத்தில், 119 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 150 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. பாசனத்துக்கு பயன்படாத ஏரிகளில் இருந்து, 2 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT