கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் இன்று கூடி கடல்அழகை ரசித்த சுற்றுலா பயணிகள். 
தமிழகம்

கரோனாவுக்குப் பிறகு குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: தொடர் விடுமுறைகளில் 30 ஆயிரம் பேர் வருகை

எல்.மோகன்

கன்னியாகுமரியில் தொடர் விடுமுறையில் இரு ஆண்டுகளுக்குப் பின்பு சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் கூடினர். 4 நாட்களில் 30 ஆயிரம் பேருக்கு மேல் வருகை புரிந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு தளர்வால் கன்னியாகுமரி உட்பட சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் பல சுற்றுலா மையங்களில் தளர்வுகள் செய்யப்பட்ட போதிலும் கடற்கரை சுற்றுலாத் தலம் என்பதால் கன்னியாகுமரியில் தொடர்ந்து தடை நீடித்து வந்தது. இதனால் இரு ஆண்டுகளாக கன்னியாகுமரி சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரம் பெற்று வந்த நடைபாதை வியாபாரிகளில் இருந்து பிற வர்த்தகர்கள் வரை பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

இந்நிலையில் இரு மாதமாக கட்டுப்பாடுகளுடன் கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் விடுமுறை தினங்களான வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் இயல்புநிலை இரு ஆண்டுகளாக திரும்பாமலே இருந்தது. அதே நேரம் கடந்த மாதம் இறுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களிலும் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்காக படகு இல்லத்தில் வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்.

இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், படகு இல்லம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, சூரிய உதயம், அஸ்தமன மையங்கள் மீண்டும் களைகட்ட துவங்கின.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 4ம் தேதியில் இருந்து இன்று வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் கன்னியாகுமரியில் கூடினர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். படகு இல்லம், விவேகானந்தா கேந்திரம், முக்கடல் சங்கம பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்று மக்கள் படகு சவாரி மேற்கொண்டனர். தொடர் விடுமுறையில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மேல் கன்னியாகுமரி வந்திருந்தனர். கரோனா கட்டுப்பாடுகளால் இரு ஆண்டுகளுக்கு பின்பு கன்னியாகுமரியில் கூடிய அதிக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இதுவாகும். நாளை வேலை நாள் என்பதால் இன்று மதியத்திற்கு பின்பு கன்னியாகுமரி வந்திருந்த சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

SCROLL FOR NEXT