தமிழகம்

தடுப்பூசி போடாதோர் வீடுகளுக்கே நேரடியாக சென்ற புதுவை ஆளுநர்

செ. ஞானபிரகாஷ்

தடுப்பூசி போடாதவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை விசாரித்து தடுப்பூசி போடும் பணி மழையிலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை மேற்கொண்டார்.

அப்போது தடுப்பூசி போடாத ஒருவரிடம் பேசி அவர் ஊசி போட வந்தபோது அவர் மதுஅருந்தியிருந்தது தெரிந்ததையடுத்து, "ஊசி போடுறீங்களோ இல்லையோ, அதை போட்டுறீங்க. முதலில் அப்பழக்கத்தை விடுங்கள்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியை நூறு சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்ற வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் முகாம் முத்தியால்பேட்டை தேபசியன்பேட் (ஆரம்ப சுகாதார நிலையம் அருகில்) மற்றும் ரோசாரியோ விதிகளில் இன்று நடந்தது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை, மழையிலும் தடுப்பூசி போடாதவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி போடாதவர்களைச் சந்தித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிதன் அவசியத்தை எடுத்துக் கூறி தடுப்பூசி போடச் செய்தார். அதனைத் தொடர்ந்து கருவடிகுப்பம் ராஜீவ் காந்தி வீதியிலும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார்.

சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர். ஸ்ரீராமலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். தனக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருப்பதால் கரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தோடு தடுப்பூசி போடாமல் இருந்தவருக்கு அவரது ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து தைரியமூட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்தார்.

அதனைத் தொடர்ந்து அதே போன்று அச்சத்தில் இருந்த மற்றொரு பெண்மணியையும் அவரது பயத்தை தெளிவித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்தார். மருத்துவ அதிகாரிகளும் பணியாளர்களும் அறிவுறுத்தியும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஒரே தெருவைச் சேர்ந்த 30 நபர்கள் துணைநிலை ஆளுநரின் அறிவுரையைக் கேட்டு தடுப்பூசி கொண்டனர். சிலரின் குடும்ப மருத்துவர்களிடமும் பேசினார். அப்போது 70 வயதுடையவர் தடுப்பூசி போடாமல் இருந்ததால் அவரிடம் பேசினார்.

இதையடுத்து தடுப்பூசி போட அவர் வந்தார். அப்போதுதான் அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. அதற்கு ஆளுநர், "ஊசி போடுறீங்களோ இல்லையோ, அதை போட்டுறீங்க. முதலில் அப்பழக்கத்தை விடுங்கள். ஊசிதான் போடவேண்டும். அதை போடக்கூடாது" என்று குறிப்பிட்டு அவரை அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறுகையில், "வீடு வீடாக சென்று யாரெல்லாம் தடுப்பூசி போடவில்லை என கணக்கெடுப்பு நடந்து முடிந்தது. தடுப்பூசி போடாதவர்கள் வீட்டுக்கு சென்றால், தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள். நீரிழிவு, ரத்த அழுத்தம் இருந்தால் உடன் தடுப்பூசி போடவேண்டும். இதய நோயை விட கரோனா அபாயகரமானது. புதுச்சேரியில் 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போடவில்லை. அதனால் தடுப்பூசி போடாதவர்கள் வீட்டுக்கு நேரடியாக சென்று கூறுவேன்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT