108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலுக்கு கடந்த 4 நாட்களில் 1,04,184 பேர் வருகை தந்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை சாதாரண நாட்களில் 4,000 முதல் 5,000 ஆகவும், விழாக் காலங்களில் 10,000 ஆகவும் இருக்கும். அதேவேளையில், மிக முக்கிய விழாக் காலங்களில் பல்லாயிரம் பேர் முதல் லட்சக்கணக்கானோர் வரை வருகை தருவர்.
இதனிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.3-ம் தேதி முதல் நேற்று வரை 1,04,184 பேர் வருகை தந்துள்ளனர். இதன்படி, நவ.3-ம் தேதி 7,187 பேரும், நவ.4-ம் தேதி 19,530 பேரும், நவ.5-ம் தேதி 31,759 பேரும், நவ.6-ம் தேதி 45,708 பேரும் வருகை தந்துள்ளனர். நவ.6-ம் தேதி 45,708 பேர் வருகை தந்ததே நிகழாண்டில் இதுவரை கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.