இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் உள்ள நிலையில், சுமார் 4.5 கோடி நிலுவை வழக்குகளால் இந்திய நீதித் துறை திணறி வருகிறது.
உச்ச நீதிமன்றம், 25 உயர் நீதிமன்றங்கள், 7,402 கீழமை நீதிமன்றங்களுடன் இந்திய நீதித் துறை செயல்படுகிறது. தேசிய நீதித் துறை தகவல் மைய கணக்கெடுப்புப்படி கீழமை நீதிமன்றங்களில் ஒரு கோடியே 56 ஆயிரத்து 411 சிவில் வழக்குகள், 2 கோடியே 77 லட்சத்து 11 ஆயிரத்து 220 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 3 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்து 631 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 77% வழக்குகள் ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ளன.
இதேபோல, உயர் நீதிமன்றங்களில் 58.50 லட்சம் வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 69 ஆயிரம் வழக்குகள் என நாடுமுழுவதும் மொத்தம் 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் 7 லட்சத்து ஓராயிரத்து 54 சிவில் வழக்குகள், 5 லட்சத்து 53 ஆயிரத்து 281 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 12 லட்சத்து 54 ஆயிரத்து 335 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 607 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்கள் ஆன்லைன் வாயிலாக நடந்துவருவதால், வழக்குகளின் தேக்கம்மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்2019-ல் அதிகபட்சமாக 12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்ட நிலையில்,கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 6.20லட்சமாக குறைந்துள்ளது. ஒவ்வோர்ஆண்டும் குறைந்தபட்சம் 2 லட்சம் வழக்குகள் புதிதாக தேக்கமடைவதால், நீதித் துறை திணறி வருகிறது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் ஆர்.கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘‘மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை. தற்போது10 லட்சம் பேருக்கு 21 நீதிபதிகளே உள்ளனர். நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கத்தைக் குறைக்கவும், குற்றவியல் வழக்குகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் நீதிபதி வி.எஸ்.மாலிமத் கமிட்டி ஏராளமான பரிந்துரைகளை அளித்துள்ளது.
அதன்படி, கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் சாட்சி விசாரணைகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, நீதிமன்ற நேரத்தையும், வழக்கு விசாரணை காலத்தையும் குறைக்கலாம். பல நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல வழக்குகளில் கேஸ் கட்டுகள் மாயமாகி விடுவதும் பிரச்சினையாக உள்ளது. எனவே, பாதுகாப்பு வசதி களை மேம்படுத்த வேண்டும்.
மக்கள் நீதிமன்றங்கள், இசைவு மற்றும் சமரச தீர்வாணையங்கள் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தினால், வழக்குகளின் தேக்கம் குறையும்’’ என்றார்.