வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், ரூ.5.60 கோடி நிரந்தர வைப்பு நிதி முடக்கத்தை நீக்க கோரி தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த ஆகஸ்ட்டில் சோதனை நடத்தினர்.
பணப் பரிமாற்றத்தில் சந்தேகம்
மேலும், வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர் பணிகளை மேற்கொண்ட உடுமலைப்பேட்டை பி.எஸ்.லோகநாத் என்பவரை பங்குதாரராக கொண்ட மெட்ராஸ் இன்ஃப்ரா என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கர்நாடகா வங்கியில் இந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை ரூ.4.95 கோடி, லோகநாத் பெயரில் இருந்த வங்கிக் கணக்கு, ரூ.65 லட்சம் நிரந்தர வைப்பு நிதி ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடக்கினர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குக்கும், தங்கள் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் மெட்ராஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் பெயரில் உள்ள நிரந்தர வைப்பு நிதி மற்றும் தனது பெயரில் உள்ள வைப்பு நிதியை விடுவிக்க கோரி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் லோகநாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ் தனது உத்தரவில் கூறியதாவது:
ஆஜராகவில்லை
சட்டப்பூர்வ வருமானம் மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக வைத்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். ஆனால், வங்கி பணப் பரிமாற்றம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியும் மனுதாரர் ஆஜராகவில்லை. இந்த சூழலில், மனுதாரர் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கும், லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்க முடியாது.
மனுதாரர் உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு முகவரியை குறிப்பிட்டு அங்கு இந்த நிறுவனம்செயல்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த முகவரியில் குடிநீர் கேன் விநியோக நிறுவனமும், மற்றொரு பகுதியில் கிரில்ஒர்க்ஸ் நிறுவனமும் செயல்படுவதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
மனுதாரருக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது, அவரது வங்கிக் கணக்கில் குறுகிய காலத்தில் அதிக அளவில் பணம் வந்திருப்பது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது.
இவ்வாறு கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.