திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் மேம்பாட்டு பணிகளை 2 ஆண்டுக்குள் முடிக்க முதல்வர்ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் ரூ.300 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், இக்கோயிலின் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத் துறைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, பக்தர்கள்சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல் திருப்பதிபோல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது ஆகியவை குறித்துஇதில் ஆலோசிக்கப்பட்டது.
அன்னதானக் கூடம்
அன்னதானக் கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1,000 பேர் ஒரேநேரத்தில் உணவு அருந்தும் அளவுக்கு திட்டங்கள் தயார் செய்வது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் காத்திருக்கும் அறையில் தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்துவது, கோயிலை சுற்றிலும் பனைபொருட்கள், கடல்சார் பொருட்கள் விற்பனை கடைகளை இன்னும் அதிக அளவில் அமைப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை தொடங்கி, 2 ஆண்டுக்குள் முடித்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டது.