சி.கோபாலகிருஷ்ணன் 
தமிழகம்

மதுபோதையில் மற்றொருவரின் வீட்டுக்குள் நுழைந்ததாக அதிமுக முன்னாள் எம்பி மீது வழக்கு

செய்திப்பிரிவு

மதுபோதையில் மற்றொருவரின் வீட்டுக்குள் ஆடையின்றி நுழைந்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீலகிரி தொகுதி முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் சி.கோபாலகிருஷ்ணன். அதிமுகவைச் சேர்ந்த இவர் நீலகிரி தொகுதி முன்னாள் எம்பி ஆவார். சி.கோபாலகிருஷ்ணன், தீபாவளியன்று மதுபோதையில் ஆடையின்றி, குன்னூரில் கோபி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ பதிவு

இதனால், வீட்டு உரிமையாளர் கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு, கோபாலகிருஷ்ணனும் வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்தில் கோபி முன்னாள் எம்பியை சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. அத்துடன் கோபாலகிருஷ்ணனை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், அப்போது, முன்னாள் எம்பி சி.கோபாலகிருஷ்ணன், கோபியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் எம்பியின் ஆதரவாளர்கள் அவரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து, கோபி குன்னூர் காவல்நிலையத்தில் தான் பதிவு செய்த வீடியோவுடன் கோபாலகிருஷ்ணன் மீது புகார் அளித்தார். மற்றொருவர் வீட்டுக்குள் ஆடையின்றி நுழைந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவரைத் தாக்கிய கோபி மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோபி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT