தமிழகம்

சுற்றுலா மாளிகை பொறுப்பாளர் மீது தாக்குதல்- திமுக நிர்வாகி கைது: கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையின் பொறுப்பாளராக பணியாற்றி வருபவர் சதாம் சேட் (29). கடந்த 4-ம் தேதி மாலை 6 மணியளவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான, தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன்(44) என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் அரசு சுற்றுலா மாளிகைக்கு காரில் வந்து உள்ளார். அங்கு வைத்து அவர்கள் மது அருந்தியுள்ளனர்.

இதனை சதாம் சேட் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சதாம் சேட்டை தாக்கியுள்ளனர். காயமடைந்த சதாம் சேட் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி பில்லா ஜெகன் மற்றும் 5 பேர் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பில்லா ஜெகன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.

இதற்கிடையே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.பில்லா ஜெகன், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT