கோவையில், இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் தனது புகைப்படத்தை வெளியிட்ட கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள, காந்தி மாநகரைச் சேர்ந்தவர் அசோக்குமார்(28). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளனர். அசோக்குமாருக்கும், பக்கத்து வீதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்னர் அசோக்குமார், அரிவாளை முதுகில் வைத்தபடி, எங்க ஏரியாவில் வந்து போட்டுப் பாருங்க என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் பதிவிட்டு இருந்தார். இது அவருடன் முன்னரே தகராறில் இருந்த பக்கத்து வீதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டுத் தான் அவர் பதிவிட்டுள்ளதாகவும் அவர்கள் எண்ணியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றார். அங்கு முன்னரே, பக்கத்து வீதியைச் சேர்ந்த அசோக்குமாரின் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்தனர். அசோக்குமாரை பார்த்த அவர்கள், அரிவாளுடன் புகைப்படத்தை ஏன் பதிவிட்டுள்ளாய் என அவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசோக்குமாருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் இருந்த அரிவாள் மற்றும் கத்தியை எடுத்து அசோக்குமாரை வெட்டினர்.
இதில் நிலைகுலைந்த அசோக்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதைப் பார்த்த எதிர்தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், அசோக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் முன்னரே உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் கொலை வழக்குபதிந்து, இதில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.