போலியோவை ஒழித்ததைப்போல் இந்தியாவில் நிமோனியாவை ஒழிக்க வேண்டும் என்று முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய முப்பெரும் விழா, ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன், முதியோருக்கான மருத்துவத்தில் ஆற்றிய சிறப்பான பணிக்காக கவுரவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வி.எஸ்.நடராஜன் எழுதிய ‘கேள்வி பதிலில் முதியோர் நல மருத்துவம்’ நூலை தியாகி லஷ்மிகாந்தன் பாரதி வெளியிட முதல் பிரதியை நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். ‘வயதானவர்களுக்கு தடுப்பூசி’ குறும்படத்தை முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் வெளியிட்டார். விழாவில் ராஜசேகரன் மணிமாறன், மருத்துவர்எஸ்.அபிராமி பிரேம்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் மருத்துவர் வி.எஸ்.நடராஜன் பேசியதாவது:
‘கேள்வி பதிலில் முதியோர்நல மருத்துவம்’ நூல், முதியோர்மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த வழிக்காட்டியாகும். ‘முதியோருக்கான தடுப்பூசி’ குறும்படம், நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற நோய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது. முதியோர்கள் உயிரிழக்க முக்கியகாரணமாக நிமோனியா உள்ளது.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளமுதியோர்களுக்கு இலவசமாக தடுப்பூசியை அரசு வழங்க வேண்டும். இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டதைப் போன்று நிமோனியாவை ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசும்போது, “டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்தியாவின் பெருமைமிக்க விருதான வயோஷ்ரேஷ்தா சமான் விருதை பெற்றிருப்பது தமிழகத்துக்கு பெருமை” என்றார்.
நல்லி குப்புசாமி பேசும்போது, “முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் எழுதிய புத்தகத்தில் ‘கீழே விழாமல் தடுப்பது’ என்பது நான் பார்த்த தலைப்புகளில் ஒன்றாகும். முதியவர்கள் கீழே விழுந்த பிறகு பலசிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றி இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது” என்றார்.