மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பாக 58 பழங்குடியின மொழிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
மனித வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்து திருக்குறள் விளக்குகிறது. இதில் உள்ளகருத்துகள் இனம், மொழி, பாலின பேதங்களின்றி எக்காலத்துக்கும் பொருந்துவதால் திருக்குறள் ‘உலகப் பொது மறை’ என்றும்அழைக்கப்படுகிறது. இதன்சிறப்பை அறிந்த அறிஞர்களால் 1800-ம் ஆண்டில் இருந்தே 43மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் குறைந்த அளவிலேயே உருவாக்கப்பட்டதால் திருக்குறள், பல மொழிகளில் முழுமையாகச் சென்றடையவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டுமத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், முதற்கட்டமாக அரசமைப்பின் 21 மொழிகளில் பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி மொழிகளில்திருக்குறளை ஏற்கெனவே மொழிபெயர்த்திருந்தது. இந்நிலையில், திருக்குறளை உலகின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன்கூறியதாவது: உலகம் முழுவதும், திருக்குறள் சென்றடைய, மொழிபெயர்க்கும் பணியைத்தொடங்கும் முன்பாகவே, இந்திய மற்றும் சர்வதேச அளவில் 43 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன. ஆனால், அவற்றில் பல,ஒற்றைப் பிரதியாகவே உள்ளன.
மேலும், விளக்கவுரைகள் தெளிவாக இல்லை. திருக்குறள் மீதுஅதிகப்பற்றுள்ள பிரதமர் மோடி,மொழி பெயர்ப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இதனைகருத்தில் கொண்டும், உலகப் பொதுமறையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில் தற்போது மொழி பெயர்ப்பு பணியைத் தொடங்கி உள்ளது. அதன்படி, இந்தி, மராத்தி, நேபாளி, மலையாளம், ஒடியா, உருது, அரபி, பாரசீகம், படுகு, வாக்ரிபோலி ஆகிய 10 மொழிகளில் திருக்குறள் விரைவில் வெளியாகவுள்ளது.
இதன்தொடர்ச்சியாக, பாசா, பர்மீஸ், ஃபிஜியன், ஐரிஷ், கெமர், கிரியோல், மலாய், மங்கோலியன், தாய், வியட்நாமிஸ், டேனிஷ், சிங்களம், ஜப்பானியம், கொரியன், சௌராஷ்டிரா, கொங்கனி, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, கொங்கணி, மைதிலி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி உள்ளிட்ட 42 மொழிகளிலும் திருக்குறள் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும், இந்திய அரசமைப்பில் இல்லாத 66 மொழிகளிலும் மொழிபெயர்ப்பு நடைபெற்று வருகிறது. இதில், ஆதி, அங்கமி, அவோ, படகா, இருளா, காட்டு நாயக்கர்,கோடா, கொண்டா, கோயா,முண்டா, பனியா உள்ளிட்ட 58 பழங்குடியினர் மொழிகளும்அடங்கும். இதற்காகச் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள், மொழி அறிஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒரு மொழியில் மொழிபெயர்க்க ரூ.1.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு, உலகின்அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட நூல் என்ற இலக்கை நோக்கி,திருக்குறள் பயணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.