ஒப்பிலான்பட்டி கிராமத்தில் தீபாவளியன்று கபடி விளையாடிய சிறுவர்கள். 
தமிழகம்

திருப்பத்தூர் அருகே வறியவர்களுக்காக 68 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 13 கிராம மக்கள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வறியவர்கள் மனது கஷ்டப்பட கூடாது என்பதற்காக 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 68 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாமல் இருந்து வருகின்றனர்.

தீபாவளி என்றாலே புத்தாடை அணிவது, பட்டாசுகள் வெடிப்பது என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியாகஇருப்பர். ஆனால், தீபாவளியன்று திருப்பத்தூர் அருகேயுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இயல்பாக அவரவர் பணிகளில் ஈடுபடுவது ஆச்சரியமாக உள்ளது.

திருப்பத்தூர் அருகே மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, சத்திரப்பட்டி, கிலுகிலுப்பட்டி, இடையபட்டி, எருமைப்பட்டி, தென்மாபட்டி உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன. கடந்த 1954-ம் ஆண்டு இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், கூலித் தொழி லாளர்களாகவும் இருந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக கடன் வாங்கி சிரமத்துக்கு உள்ளாகும்நிலை ஏற்பட்டது. இதையடுத்து வறியவர்கள் மனது கஷ்டப்பட கூடாது என்பதற்காக, அனைவரும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவதில்லை என ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். அதன்படி 68 ஆண்டுகளாக 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளியை கொண்டாடாமலேயே இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒப்பிலான்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி, உலகநாதன் ஆகியோர் கூறியதாவது: அக்காலத்தில் ஏராளமானோர் தீபாவளி கொண்டாட முடியாமல் இருந்தனர். தற்போது ஒருசிலர் மட்டுமே வறியவர்களாக உள்ளனர். இருந்தாலும், அவர்களுக்காக தீபாவளியை கொண்டாடாமல் இருந்து வருகிறோம். இதனை ஊர் கட்டுப்பாடாக எண்ணாமல் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் மனதார ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நெல் அறுவடை முடிந்து விடுவதால், அனைவருக்கும் போதிய வருவாய் இருக்கும். எனவே, அப்பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடுவோம் என்று கூறினர்.

SCROLL FOR NEXT