கனமழையால் நிரம்பிய செல்லிப்பட்டு படுகை அணையில் குளிக்க அனுமதி மறுத்து, வழிகளில் முற்களைப் போட்டு போலீஸார் அடைத்தனர். இதனால் உள்ளுர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரி, இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் படுகை அணைகள், அணைக்கட்டுகள், நீர்வரத்து வாய்க்கால்கள் நிரம்பி வழிகின்றன. நிரம்பி வழியும் அணைகள், வாய்க்கால்களில் கிராமத்து இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தும், மீன்கள் பிடித்தும் வருகின்றனர். மேலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்தும் வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான படுகை அணை நிரம்பி வழிகிறது. இதனை அறிந்து உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தவண்ணம் இருந்தனர்.
பலர் குளித்தும் மகிழ்ந்தனர். இந்நிலையில், இன்று (நவ. 6) செல்லிப்பட்டு படுகை அணைக்குச் செல்லவும், குளிக்கவும் போலீஸார் திடீரென அனுமதி மறுத்து அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். மேலும் படுகை அணைக்குச் செல்லும் வழிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் முற்களைக் கொண்டு அடைத்து தடை ஏற்படுத்தினர்.
வீடூர் அணை எந்தேரமும் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், படுகை அணையில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்புக் கருதியும், ஏற்கனவே அணையில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டும் அனுமதி மறுக்கப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். போலீஸாரின் இந்த திடீர் தடையால் செல்லிப்பட்டு படுகை அணை பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து, திரும்பிச் சென்றனர்.