தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வட தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டமாய் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
மீனவர்கள் நவம்பர் 9, 10 தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும், நவம்பர் 10 முதல் 12 வரை தென்மேற்கு வங்கக் கடல், தமிழக கடற்கரைப் பகுதி, அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.