மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தொடர் தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து சென்னையில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்தவுடன் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக குறித்தும், சசிகலாவின் ஆதரவு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தினகரன் பதிலளிக்கும்போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். ஜனநாயக ரீதியாகத்தான் நாங்கள் கட்சியை மீட்டெடுக்க முடியும். எனவே அடுத்த தேர்தலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். சசிகலாவின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் உள்ளது. முதலில் அவர் எனக்கு சித்தி. பின்னர்தான் அரசியல்வாதி. எனக்கு அவர் ஆதரவு உள்ளது என்று அறிக்கைவிட வேண்டிய அவசியம் இல்லை. அவரது ஆதரவு எனக்கு எப்போதும் உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமைதான் கூடி முடிவெடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தால், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
அதிமுக கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டாலும், தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தன்னை முன்னிறுத்தி வருகிறார். தனது காரிலும் அதிமுக கட்சிக் கொடியை அவர் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.