தமிழகம்

புதுச்சேரியில் 20 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (நவ.6 ) வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 1,523 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில்-5, காரைக்காலில்-6, ஏனாமில்-2, மாஹேவில்-7 பேர் என மொத்தம் 20 பேருக்கு (1.31 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 64 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 240 பேரும் என மொத்தமாக 304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஏனாம் கோபால் நகர் பகுதியைச் சேர்ந்த 47 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,862 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 999 (98.31 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரத்து 205 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT