தமிழகம்

புதுவையில் கனமழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை

அ.முன்னடியான்

புதுச்சேரி கிராம பகுதிகளில் கனமழையால் நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கியன. வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் வரை மழை கொட்டி தீர்த்தது. தீபாவளி அன்று மழைவிட்டு லேசான வெயில் அடித்தது. நேற்றும் வெயில் தொடர்ந்தது. இரவில் ஒருசில பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது.

இந்த தொடர் மழை காரணமாக புதுச்சேரி நகர் பகுதி மற்றும் கிராமப் புறங்களில் தாழ்வான இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது சம்பா சாகுபடி பருவம். இதற்காக பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரையில் நெற்பயிர் துளிர்விட்டுள்ளது. இந்த நிலையில் நெட்டப்பாக்கம், கரையாம்புத்தூர், மணலிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம், அரங்கனூர், சேலியமேடு, பாகூர் உள்ளிட்ட பகுதியில் நடவு செய்யப்பட்ட 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

வயல் வெளியில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாததே இதற்கு காரணம். மழைநீர் வெளியேற வேண்டிய கால்வாய்கள் அடைத்து கிடக்கிறது. இந்த கால்வாய்களில் கோரை புல், ஆகாய தாமரை வளர்ந்து கிடப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் வடிகால் வாய்க்கால்களே அமைக்கப்படவில்லை. இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது பற்றி விவசாய பெண்மணிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொறு ஆண்டும் மழை காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகிறது. இதற்கு அரசு உரிய தீர்வு காணவில்லை. தேவையான வடிகால் வாய்க்கால்கள் அமைத்து தரவில்லை.

பல முறை மனு கொடுத்தும், நேரில் அனுகியும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிதி இல்லை என்று தட்டிக்கழிக்கின்றனர். கடன் வாங்கி தான் விவசாயம் செய்கிறோம். ஆனால் முறையான வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இதே நிலை நீடித்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, அரசு உரிய தீர்வு காண வேண்டும். தேசமடைந்த பயிர்களுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும்.’’என்றனர்.

இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு இன்று (நவ. 6) நெட்டப்பாக்கம் பகுதியில் நேரில் சென்று நீரில் மூழ்கிய நெற்பயிர்களை விவசாய நிலத்தினுள் இறங்கி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு சென்றார்.

SCROLL FOR NEXT