கரூரில் நவம்பர் 12-ம் தேதி மகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாம் நடைபெறும் என மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
''நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி மற்றும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டுசெல்லும் நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் கடந்த அக்.2-ம் தேதி தொடங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக வரும் 12-ம் தேதி மகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாம் கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மற்றும், மாவட்ட நீதிபதியுமான எம்.கிறிஸ்டோபர் என்னும் தனது தலைமையில் கரூர் நீதிமன்றப் பழைய கட்டிட வளாகத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அனைத்துத் தரப்பு அதிகாரிகளும் பங்கேற்று அந்தந்தத் துறை சம்பந்தப்பட்ட அரசு நலத்திட்டங்களையும், உதவிகளையும் வழங்க உள்ளனர்.
எனவே, இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு அரசு நலத்திட்ட விவரங்களையும், விளக்கங்களையும், உதவிகளையும் தெரிந்து கொள்ளவும் அல்லது பெற்றுக் கொள்ளவும் வேண்டும். 12ஆம் தேதிக்கு முன்பாக மனு கொடுக்க விரும்புவோர் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்''.
இவ்வாறு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.