தமிழகம்

2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் 65.7 லட்சம் பேர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்தாதவர்கள் 14,07,903 பேரும், கோவிஷீல்டு 2-வது தவணை செலுத்தாதவர்கள் 51,60,392 பேரும் என மொத்தம் 65,70,295 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்தாதவர்கள் 14,07,903 பேரும், கோவிஷீல்டு 2-வது தவணை செலுத்தாதவர்கள் 51,60,392 பேரும் என மொத்தம் 65,70,295 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளார்கள்.

உலகம் முழுவதிலும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பானது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பெரிய அளவிலான அச்சுறுத்தல் தொடங்கியுள்ள சூழலில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் முக்கியம். இந்தச் சூழலில் நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலையில் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமில்லாமல் தினந்தோறும் வார நாட்களில் இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்.

மேலும், நவம்பர் 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. எனவே இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT